Wednesday 31 October 2012

Padikasu


சிவசிவ
திருச்சிற்றம்பலம்

படிக்காசு

பக்தி, அன்பு, பாசம் அத்தனைப் பண்புகளை விட அதிக மரியாதை தொண்டிற்கு உண்டு என்பதை உலகுக்கு இறைவன் உணர்த்திய வரலாறு படிக்காசு.

சோழவளநாடு சோறுடைத்து என்று பேர் பெற்ற ஊர் திருவீழிமிழலை. இயற்கைத் தோல்வியால் காய்ந்து கருகி பஞ்சம் பீடிக்கப்பட்டு வெட்ட வெளியாய் நிற்கிறது. அப்பர் பிரானும், சம்பந்தப் பெருமானும் ஆண்டவனிடம் வேண்ட சன்னிதியில் தினந்தோறும் நின்று பாடிவருகின்றனர். ஆளுக்கொரு காசு படியில் இருக்கும். அப்படிக்காசினை ஏற்றுக் கொண்டு வெளியிடங்களுக்கு சென்று பொருட்களை வாங்கி வந்து அவ்வூர் மக்களை காத்தருளும் திருப்பணியினை தினந்தோறும் செய்து வருகின்றனர். அப்பர் பிரான் இறைவனை புகழ்ந்து பாடுவதுடன் நில்லாமல் உழவாரபணி எனப்படும் கோயில் சுத்தம் செய்வது, புல் புதர்களை நீக்கும் பணியினை செய்துவருகிறார்.

சில நாட்களில் ஞானசம்பந்தர் அந்த மாற்றத்தை உணர்கிறார். நாவுக்கரசப்பெருமானின் காசுக்கு அரைப் பங்கு அதிக மதிப்பு கிடைக்கிறது.அப்பர் பிரான் தினந்தோறும் சற்று அதிகமாக பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறார். குறைக்கொண்ட காசா நமக்கு? இது என்ன சோதனை? என்று வாடிய சம்பந்தபெருமான். இறைவனிடமே முறையிடுகிறார். சிவபெருமான் ஞானசம்பந்தரின் முன் தோன்றி "சம்பந்தா! உன் பக்தியில் ஒரு குறையுமில்லை, எம்மை நினைத்து நெஞ்சுருகுவதில் உமக்கும் அப்பர் பிரானுக்கும் எம்முன்னால் எந்த பாகுபாடுமில்லை. அயினும் ஒரு சிறு உண்மையினை இன்று உமக்கு சொல்கிறோம். உமக்கு அளிக்கப்படும் இந்தக் காசு உமது பக்திக்கும் பாடலுக்கும் மகிழ்ந்து. நாவுக்கரசருக்கு நாமளிக்கும் காசு அவரது உழவாரப் படை தொண்டினை நினைந்து. தினந்தோறும் நான் எங்கெல்லாம் வீற்றிருக்கிறேனோ அங்கெல்லாம் வளாகங்களைச் சீர்படுத்தி, புதர்களை அகற்றி சுத்தப்படுத்தி வரும் அவரது தொண்டிற்கு மகிழ்ந்தே நாம் அவருக்கு காசு ஈந்து வருகிறோம் . நாம் என்ன செய்யட்டும், தொண்டிற்கு வழங்கப்படும் பரிசுக்கு அல்லது கூலிக்கு வேறு எதற்காக வழங்கப்படும் காசைவிட அரைப் பங்கு மதிப்பு அதிகம் என்பதை நாமும் இன்றுதான் உணர்கிறோம். பக்தி, அன்பு, பாசம் அத்தனைப் பண்புகளை விட அரைப்பங்கு அதிக மரியாதை தொண்டிற்குத்தான் என்பதே உண்மை".

சிவனாரும் இதைக் கூறி மறைகிறார். இந்த உலகிலேயே சிறந்தது தொண்டுதான் என்பதை இறையனாரே நேரில் வந்து விளக்கிவிட்டு செல்கிறார். இதுவும் திருவிளையாடலே. இறைவன் இதயத்தில் அதிக மதிப்பைப் பெருவது தொண்டுதான் என்பதை அம்மையப்பனே சாட்சியாக வந்து சொல்லிவிட்டு செல்கிறார்.

நமது ஆலயங்களில் உள்ள புலவர்கள், அடியார்கள் விக்ரகங்கள் எல்லாமே கையில் ஏடு, எழுத்தாணி, கமண்டலம் அல்லது பூஜைக்குரிய சாதனங்களோடு நிற்பதுபோல் தான் படைக்கப்பட்டிற்கும். இந்த நாயன்மார்கள், ஆழ்வார்கள் மத்தியில் ஒருவர் மட்டும் புல்செதுக்கியைத் தோளில் வைத்துக்கொண்டு காட்சி தருவார். அவர்தான் அப்பர் பெருமான்.ஆயிரம் பாடல்களாலும் பூஜைகளாலும் பிடிக்க முடியாத இறைவனின் இதயத்தை அப்பர்பிரானின் உழவாரபடைத் தொண்டு அதிகமாக ஈர்த்துவிட்டது.

தொண்டிற்கே என் இதயத்தில் முதலிடம் என்று அந்த கறைமல்கு கண்டன், கனலெரியாடுங்கடவுள் எம்பிறை மல்கு சென்னியுடையவன் எங்கள் பெருமானே நேரில் வந்து சொல்லிச் சென்ற பிறகு நாமும் நம்மால் இயன்ற உடல் உழைப்பினை (உழவார பணியினை) இறைவன் பணிக்கு செய்வோமானால், இறைவன் இதயத்தில் நமக்கும் இடம் இருக்குமல்லவா!

திருச்சிற்றம்பலம்

சு . நாகராஜன்,
தலைவர், 
சேக்கிழார் அறநெறி இயக்கம் 
கன்னியாகுமாரி   மாவட்டம்.

No comments:

Post a Comment