Wednesday 31 October 2012

என் கடன் பணிசெய்து கிடப்பதே


சிவ
திருச்சிற்றம்பலம்

என் கடன் பணிசெய்து கிடப்பதே

             “Men may come and Men May go; I will go on for ever” என்று ஆறு தன் வரலாற்றை கூறுகிறது என்பார்கள் வரலாற்று ஆசிரியர்கள். பன்னெடுங்காலமாக புவியில் ஓடுகின்ற ஆற்றில் எத்தனை யுகங்கள், எத்தனை மனிதர்கள், வந்து போயிருப்பார்கள். ஆறோ, தன் பணியைத் தவறாமல் காலம் காலமாய் தொடர்கிறது. இந்த வகையில் நம் அடியார் பெருமக்களும், சமுதாய சிந்தனையாளர்களும், பிறன் நோக்கினைப் புறந்தள்ளி, தன் நோக்கில் என் கடன் பணி செய்து கிடப்பதேஎன்று இறைத் தொண்டு மேற்கொண்டு இன்புற்று இருக்கிறார்கள். இந்த அர்பணிப்பு சிந்தனைக்கு ஏழாம் நூற்றாண்டிலேயே தன்னை ஆளாக்கிக் கொண்டவர் அப்பர் அடிகளார்.
           
            “நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினள்
            தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்
            தம் கடன் அடியேனையும் தாங்குதல்
            என் கடன் பணிசெய்து கிடப்பதேஎன்று இறுமாந்தார்.

            நாம் அனைவரும் ஒவ்வொரு தொழில் செய்து வாழ்க்கை பயணத்தை மேற்கொள்கிறோம். இதுவல்ல பணி. சுயநலமற்ற செயல்களை கடமையாக செய்வதுதான் பணி”. சுயநலமற்ற செயல்களை கடனாக இல்லாமல் கடமையாக செய்ய தூய அன்பு இருந்தால் மட்டுமே முடியும். தான் இல்லாத தன்மையே அன்பு. அன்பின் செயல்பாடு தான் பணி. தாய் கூட தன் செயல்களினால் தான் அன்பின் ஆழத்தை காட்டுகிறாள்.  அன்பின் பயன் தொண்டு; அந்த தொண்டின் பயன் எல்லா உயிர்களுக்கும் இன்பம். இதுவே நம் பணி. வள்ளுவர் பெருந்தகை கூட
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்குஎன்கிறார்.
நம் சமயத்தின் அடிப்படை கூறே பணி செய்வது. தொண்டு செய்வதால் தான் அடியாரை தொண்டர் என்கிறோம்.

            பணியில் இரண்டு கூறுகள் உள்ளன. ஒன்று சமய பணி, மற்றொன்று சமுதாய பணி.

சமயத்துக்கும், சமய அடியார்கள் நலனுக்கும் உழைப்பது சமய பணியாகும்.  அடியார்களுக்கு தொண்டு செய்வதும் இல்லை எனாது வாரி வழங்குவதும், ஆலயத்திற்கு தொண்டு செய்வதும் சமய பணியாகும்.

            இதை போல் சமுதாய பணியிலும் இரண்டு கூறுகள் உள்ளன. ஒன்று உலகத்துக்கு தொண்டு செய்தல் மற்றொன்று உலகத்தில் உள்ள உயிர்களுக்கு தொண்டு செய்தல். சமுதாயத்திற்கு செய்யும் தொண்டு மிகவும் இன்றியமையாதது மட்டும் அல்ல, அது இறைவனை சென்று சேரும் என்கிறார் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலர்.
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே

            இதையே நாம் தாயுமானரின் வாக்கிலும் வாழ்க்கையிலும் காணலாம். சோழ மன்னன் தாயுமான சுவாமிகளை கெளரவிப்பதற்காக ஒரு அழகான பட்டாடையை அவருக்கு அணிவிக்கிறான். அச்சமயத்தில் அங்கு வந்த ஒரு வயதான மூதாட்டி குளிரில் நடுங்குவதை தாயுமான சுவாமிகள் பார்கிறார். உடனே அந்த பட்டாடையை அவருக்கு போர்த்துகிறார். இதைக் கண்ட மன்னன் தான் கொடுத்த பட்டாடையை தாயுமானவர் வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டாரே என்ற மனவருத்ததுடன் கோயில் செல்கிறார். அங்கே அம்பாள் தான் கொடுத்த பட்டாடையை அணிந்திருப்பதை பார்க்கிறார். அப்போது தான் உணர்கிறார். அடியாருக்கு அளிப்பது ஆண்டவனை சென்று சேரும் என்று. இதனையே நாம் தாயுமானவரின் வாக்கிலும் காணலாம்.
அன்பர் பணி செய்ய ஆளாக்கிவிட்டால்
இன்ப நிலை தானே வந்தெய்துமே பராபரமேஎன்கிறார் தாயுமானவர்.

            இந்த பணியை எவ்வாறு செய்யவேண்டும்இத்தாலியில் உள்ள ட்யுரின் பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி நிபுணர் மரியோபோகியே கான்சர் நோய்க்கு மருந்தை கண்டுபிடிக்கும் பெரும் முயற்சியில் ரேடியம் கதிர்களைத் தன் உடல் மீதே செலுத்தி விளைவைக் கண்டறியலாம் என்று முயன்றார். கதிர்வீச்சின் வெம்மை தாங்காமல் இடது கையில் ஒருவிரலை எடுக்க வேண்டியதாயிற்று அறிவுரைக் கூறிய நண்பர்களுக்கு அவர் கூறிய பதில் இறைவன் இதே கையில் இன்னும் நான்கு விரல்களை தந்திருக்கிறான். வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க முழுக்க பிறருக்கு பயனுள்ளதாக செலவு செய்வதே என் கடமையாகக் கருதுகிறேன்”. “I have no other duty in this world except doing my duty” இதுபோல நாமும் நம் பணியினை எந்த பிரதி பலனையும் எதிர் நோக்காமல் இறை சிந்தையால் மட்டுமே நிரம்பப் பெற்ற உள்ளம் கொண்ட வெறும் உடலாய் இறைவன் காலடியில் கிடந்து பணி ஆற்றவேண்டும்.

            சமயப் பணியை துடுப்பாகவும், சமுதாயபணியை படகாகவும் கொண்டு அகழ்வாரையும் இகழ்வாரையும் அற்பத் துகள்களாக கருதி அறப்பணியொன்றே தம் பணியாகக் கொண்டு என்கடன் பணி செய்து கிடப்பதே என்ற நிலையில் கிடந்த அருளாளர்களால் மட்டுமே இறைநிலை என்னும் இலக்கை எட்டமுடிந்தது என்பது நிதர்சனமான உண்மை. அவ்வழியை நாமும் கடைப்பிடிப்பது ஒன்றே நம் நிலையைப் பெருக்கும் என்பது திண்ணம்.

மேன்மைக்கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
கொட்டுக்கு இசைத்த கூத்தன் அடி போற்றி !!


திருச்சிற்றம்பலம்


-சு . நாகராஜன்,
தலைவர்,
சேக்கிழார் அறநெறி இயக்கம்
கன்னியாகுமாரி   மாவட்டம்.


No comments:

Post a Comment