Wednesday 31 October 2012

ஆலயவழிபாடு


திருச்சிற்றம்பலம்


ஆலயவழிபாடு

“ஆலயம் தொழுவது சாலமும் நன்று” இது ஒளவை மொழி. “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” இது தொன்று தொட்டு வழங்கி வரும் முதுமொழி.

“அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசிக்கும் ஆனந்த
பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது” என்று இறைவனை ஏத்துவார்.
“உயிர் தோறும் ஒளித்து நின்றக்கள்வன்” என்று பரஞ்சோதியார் பகன்றருளினார்.

இவ்விதம் இறைவன் எங்குமிருப்பினும்  ஏன் ஆலயம் சென்று வழிபட வேண்டும் என்கின்றனர் சிலர்? ஆலயம் சென்றாலும், அதன் நோக்கம் அறியாமல் உள்ளனர் பலர்.  


மனிதனின் எண்ணங்களும் உதிர்ந்த சொற்களும் எத்தனை யுகங்களானாலும் ஓரேடியாய் அழிந்துவிடாது. அவை காற்றிடை நிலவி ஒலி அலைகளாகவும் எண்ண அலைகளாகவும் நம்மை சுற்றியே நிற்கின்றன என்று தற்கால அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். அந்நிகழ்வின் அடிப்படையே வானொலி, தொலைப்பேசி மற்றும் தொலைக்காட்சிக் கண்டுபிடிப்புகள். இவ்வாராய்ச்சியின் பரிணாம வளர்ச்சியினால் மனிதனின் எண்ண அலைகளுக்கும் ஒரு மின்சாரமாற்றத்தை கொடுக்கும் நாள் வெகு தொலைவிலில்லை.

யுகயுகமாய், ஜன்மஜன்மாய் கோடானகோடி மக்களின் நேர் எண்ணங்களினால் நிரம்பப்பெற்ற ஓரேத்தலம் ஆலயம். இவ்விதமான நேர் எண்ணங்களின் தாக்கம் நமது எண்ணங்களையும் செப்பனிட்டு நமது ஆன்மீக எண்ணங்களுக்கு உரமிடும் என்பது திண்ணம்

As the thoughts so the mind
As the mind so the man
-       என்கிறார் Swamy Sinmayananda.
. இந்த அறிவியல் அடிப்படை  ஆலய வழிபாட்டின் சிறப்பம்சமாகும்
“மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந்தானும் அரண் எனத் தொழுமே” என்பது சிவஞானபோதம்.
இன்றும்  கிராம புரங்களில் ஒரு பழமொழி உண்டு அயனார் கோயில் செங்கல் எல்லாமே சாமி தான்.


நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்தில் நெஞ்சுக்குள்ளே இறைவனைக் காணும் நிலை, திருமுலர் போன்ற சித்தர் பெருமக்களால் மட்டுமே இயலும், அன்றாட லெளகீக வாழ்க்கையில் அல்லாடும் பாமர பக்தன் தன் மன உளச்சலின் மத்தியில் தூய இடம் அமைந்து அதில் தூய எண்ணம் ஆட்பட்டு இறைவனை காணும்  சாத்தியக்கூறுகள் மிகக்குறைவே. சித்தராகிய பட்டினத்து அடிகள் கூட திருவொற்றியூர் கோயிலிலே தங்கிதான் முக்தி பெற்றார்.

திருஞானசம்பந்தர் திருநல்ல்லூர்பெருமணம் ஆலயத்தில் தான் சோதியில் கலந்தார். அப்பரோ “ பூம்புகலூர் மேவியே புண்ணியனே” என்று அழைத்து தான்  சோதியில் கலந்தார். மணிவாசகபெருமானோ தில்லையம்பதியில் தான் சோதியில் கலந்தார். இவ்வாறு இறைவன் கோயிலிலேயே சிறந்து விளங்குகிறான் என்று திருமுறைகளும் சான்றாக இயம்புகின்றது. இதனால் தான் “நின் கோயில் வாசலிலே அடியாரும் வானவரும்அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய் கிடந்து நின் பவளவாய் காண்பேன்.” என்று ஆழ்வார் பாடுகின்றார்.

கோயிலுக்குச்  செல்லுங்காள், புறத்தூய்மை மட்டுமல்லாமல் அகத்தூய்மையோடு செல்லவேண்டும். “பொக்கு மிக்கவர் பூவும் நீறும் கண்டு, நக்கு நிற்பர்  அவர்தம்மை நாணியே.”  . ஆம் உள்ளத்தில் அன்பில்லாதவரை கண்டு இறைவன் சிரிப்பான் என்கிறார் நாவுக்கரசபெருமான். இறைவன் பால்  அன்போடு வழிபடவேண்டும். மனிதன் பால் அன்புசெலுத்த தெரிந்தவர்களே இறைவன் பால் அன்பு செலுத்த இயலும்.



நேராக கருவறைச் சென்று இறைவனை வணங்குதல் முறையன்று. பிரகார வலம் வந்து வணங்கியே உள்ளறைச் செல்லவேண்டும். வலம் வராது கயிலையாம் புக நினைந்த இராவணனுக்கு இறைவன் தண்டனை வழங்கியது அறிந்ததே.

உள்ளத்தால் உள்ளே வணங்கியப்பின் , உடலால் கொடிமரத்திற்கு வெளியே விழுந்து வணங்க வேண்டும். உட்பிரகாரத்தில் விழுந்து வணங்குவது குற்றமாகும்.

கோயிலில் நற்பணிகள் மேற்கொள்ள வேண்டும். கோயில் விளக்குளில் எண்ணெய் இடல் வேண்டும். கோவிலில் அணைகின்ற விளக்கை அபுத்திபூர்வமாகத் தூண்டிய எலி பலிச்சக்கரவர்த்தியாகப் பிறந்து புகழ்பெற்றது.
“நீளுகின்ற நெய்யருந்த நேரெலியை மூவுலகும்
ஆளுகின்ற மன்னவனாய் ஆக்கினையே”
- என்கிறது திருவருட்பா-

கோயிலில் சுத்தம் இன்றியமையாதது. கோயிலில் நாயின் எச்சம் அகற்றப்படாமல் இருந்ததற்காக ஆலய நிர்வாகியை சிற சேதம் செய்தான் ஒரு சோழமன்னன்.

கோயிலில் கால்நீட்டி அமர்ந்திருப்பதும், படுத்துறங்குவது குற்றமாகும். மறுபிறப்பில் மலை பாம்பாகப் பிறப்பர் என்கிறார் வாரியார் அடிகளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக அமைதிகாக்க வேண்டும். நமது ஆவேசபக்தியில் அடுத்தவர் காலில் ஏறிமிதித்து நிற்பது கூடத் தெரியவில்லை என்பது நிலை கடந்த பக்திக்கு ஏற்புடையதன்று.  . அது நிலைதிரிந்த பக்தி.

 பக்தியில் உள்ளம் தீவிரம் காட்ட வேண்டுமேயன்றி செயல்பாடுகளில் மனித நேயம் மிகவும் காணப்பட வேண்டும்.

உள்நோய்க்கு மருந்து தெய்வ சிந்தனையே. உளரோய்க்கு மருத்துவர் கடவுள்தான். அவரைக் அன்றாடும் காணும் மனையே திருக்கோயில்கள்.
உள்ளம் பெரும்கோயில் ஊனுடம்பு ஆலயம் – என்கிறார் திருமுலர்.
இதில் பெரும் கோயில் என்பது கற்பக கிரகம், அந்த கற்பக கிரகத்தில் ஆண்டவனை பிரதிஷ்டை செய்யவேண்டியது நம்து கடமை. ஆகவே அன்றாடம் ஆலயம் சென்று அங்கு இருக்கும் சிவனை நம் சீவனோடு கலந்து உள்ளமாகிய் பெரும்கோயிலில் பிரதிஷ்டை செய்து முக்தி பெறுவோமாக என்று கூறி வாய்ப்பு அளித்த நல்உள்ளங்களுக்கு நன்றி பாராட்டி விடைபெறுகிறேன்.


            மேன்மைகொள்  சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

திருச்சிற்றம்பலம்


சு . நாகராஜன்,
தலைவர்,
சேக்கிழார் அறநெறி இயக்கம்
கன்னியாகுமாரி   மாவட்டம்.

No comments:

Post a Comment