Wednesday 31 October 2012

பட்டினத்து அடிகளார்


சிவாய திருச்சிற்றம்பலம்
பட்டினத்து அடிகளார்
சிவாய திருச்சிற்றம்பலம் !!

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற நற்றமிழ் சொற்றொடர், தழிழ்கூறும் இலக்கிய உலகில் எத்துணையளவு சிறப்புமிக்கதோ, அத்துணையளவு ஆன்மிக அரங்கத்தில் சிறப்பாக பொறிக்கப்பட்ட வாசகம் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்பதாகும். இஃது  திருவிடைமருதூர் எம்பெருமான் மருதப்பனார், பட்டினத்து அடியாரின் ஞானப்பூங்காவில் நட்ட போதிமரம்.

அடியார்கள் அனைவருக்கும் வணக்கம்!!!

ஒரு சித்தராக, வரலாற்று ஆசிரியராக, மனித நேய வள்ளலாக விளங்கும் பட்டினத்து அடியாரின் ஞானப்பூங்காவில் உதித்த சில கருத்து சுவையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.

பட்டினத்தார் பற்றிய உண்மை வரலாற்றை துல்லியமாக அறியத்தக்க வரலாற்றுச் சான்றுகளில்லை. இலக்கிய சான்றுகளின் படி , மூன்று வெவ்வேறு காலங்களில் மூன்று பட்டினத்தடிகள் வாழ்ந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

பதினோராம் திருமுறையைத் தொகுத்த அதிராவடிகள் பாடல்கட்கு அடுத்து பட்டினத்துப் பிள்ளையார் அருளியவை என ஐந்து பிரபந்தங்களாக 200 பாடல்களை தந்துள்ளனர்.  இவரது காலம் 10-ம் நூற்றாண்டு பிறிதிருவர் 14 மற்றும் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

திருமுறையில் ஒருமுறையாய்ப் பேசப்படும் பட்டினத்தடிகள், பூவிரிச்சோலையாம் காவிரிப்பூம்பட்டினத்தில் , சைவமும், செல்வமும் தழைத் தோங்கிய நகரத்தார் குலதிலகம் சிவநேசர் என்பாருக்குப் பிள்ளையாய்ப் பிறந்து, திருவெண்காடர்  என்றப் பிள்ளைத் திருநாமமும் கொண்டார்.. பிள்ளைபேறு இன்மையால் மனம் வெதும்பிய பட்டினத்தடிகளுக்கு திருவிடைமருதூர் இறைவனே பிள்ளையாக ஒரு வில்வமரத்தடியில் தோன்ற அக்குழந்தைக்கு மருதவாணன் எனத் திருநாமம் இட்டு இவரது இல்லாள் சிவகலையும், ஈன்றாள் ஞானகலையும் இன்முகம் காட்டி குழந்தையைப் பேணினர்.

மருதவாணன் 16 வயதடைந்தபோது, திரைகடந்து திரிவியம் தேடச் சென்று திரும்பினான். எதிர்பார்ப்புக்கு எதிராக “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்ற சொற்றொடர் அடங்கிய ஓலை நறுக்கை கொடுத்து மறைந்தான்.

ஆயிரமாயிரம் அற நூற்களாலும், பல்லாயிரக்கணக்கான பாயிரங்களாலும் பக்குவப்படாத மனம் இந்த ஒருசொல்லுக்கு அடங்கி மெய்யறிவு உணர்த்தியது.

Üìô¢ «õí¢´ñ¢, äï¢îù¢ ¹ôî; õ¤ìô¢ «õí¢´ñ¢,
«õí¢®ò âô¢ô£ñ¢ å¼é¢°.
என்ற வள்ளுவன் வாக்கிற்கு இணங்க ஒற்றைக் கோமணத்தோடும், ஒருகையில் ஓட்டோடும், துறவுக் கோலம் பூண்டு இல்லம் துறந்தார்.

ஆகவே தான் ஒளவைபிராட்டியார் கூட
“அரிது அரிது பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது” என்றார்
ஒருகண நேரத்தில் அனைத்தையும் துறந்த இவர் வரலாறு நீங்கள் அனைவரும் அறிந்ததே.

ஆனால்  பட்டினாத்தாரின் இலக்கிய பூங்காவை ஆறாயும் போது இவர்
ஒரு சித்தரோ? ஒரு வரலாற்று ஆசிரியரோ ? ஒரு மனித நேயம் தழும்பிய வள்ளலோ? என்று தோன்றும்.

இவரது சீடரான துளுவமன்னன் பத்ரகிரி முக்தியடைந்தபின்னம் இவர் தமது சிவயோக நாளையே எண்ணி
            அஞ்சு அக்கரம் எனும் கோடாலி
            கொண்டு இந்த ஐம்புலனாம்
            வஞ்சப் புலக்காட்டை வேர் அற
            வெட்டி வளங்கள் செய்து
            விஞ்சத் திருத்தி சதாசிவம் என்கிற வித்தையிட்டு
            புஞ்சக் களைபறித்தேன் வளர்த்தேன் சிவபோகத்தையே”
என்று திண்ணிய மனத்தினராய் பேய்க் கரும்பில் இனிமைவரக்  காத்திருக்கும் போது ஒரு சித்தராக நம் மனத்தின்கண் சித்தரிக்கப்படுகிறார்.

வாளான் மகவு அரிந்து ஊட்ட வல்லேன் அல்லேன் ;
மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லேன்
தொண்டு செய்து நாளாறில் கண் இடந்து அப்பவல்லேன் அல்லன்
நானினிச் சென்று ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பனுக்கே

என்ற பாடல் மூலமாக நாவலூரரின் அடியோற்றி நாயன்மாரின் வாழ்க்கையை ஒற்றை வரியில் வடிக்கும் போது அங்கே பட்டினத்து அடிகள் ஒரு வரலாற்று அசிரியராக வர்ணிக்கப்படுகிறார்.

“ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு” என்பதன் மூலமாகவும், கொற்றவனும், உற்றவர்களும் ஏதிர்த்த போதிலும் தம் பொருள் முழுவதையும் வறியோர்க்கு தம் கணக்கர் சேந்தனார் மூலம் வாரி இறைத்தபோது  அடிகள் மனித நேய வள்ளலாக காட்சி அருளினார்.

முற்றும் துறந்த முனிவராக இருந்தபோதிலும்  “ ஐயிரெண்டுத் திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்ற”  என்ற வரியின் முலமாக தாய் அன்பிற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

பற்றற்றப் பட்டினத்தாருக்கும் ஒரு ஆசை. பரமனின் மணப் பந்தலுக்கு வந்திருந்தவர்களை வரிசைப்படுத்தி எழுதி வைத்திருப்பாயானால், இறைவா என்னையும் சேர்த்துக்கொள் என்று விண்ணப்பமிடுகிறார்.
“தமர் பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து
என்னையும் எழுதவேண்டுவன்” என்கிறார்.

காடுமேடு சுற்றி வந்தபோதும் பரம்பொருளைப் பாடும் பணியே அணியாகக் கொண்ட பட்டினத்தார் பாடல்கள்
பல்வேறு காரணங்களால் பல்லாயிரம் உள்ளங்களை ஈர்க்கும் மாமந்திரங்கள் அவை,
கவிதை நயமும், தத்துவச்செறிவும்,  ஆன்மிக ஆழமும் நிரம்பியவை அவை,
எதுகையும் & மோனையும், எளிமையும் & இனிமையும், சொற்சுவையும் &  பொருட்சுவையும் உடையவே அவை.

அவைகளை நாமும் கற்று, “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்பதை உள்ளத்தில் கொண்டு இறைவன் அருள் பெருவோமாக.

“தேனே திருவுள்ளம் ஆகி என் தீமை எல்லாம் அறுத்துத்
தானே புகுந்து அடியேன் மனத்தே வந்து சந்திக்கவெ”

சிவாயநம !!


சு . நாகராஜன்,
தலைவர்,
சேக்கிழார் அறநெறி இயக்கம்
கன்னியாகுமாரி   மாவட்டம்.

No comments:

Post a Comment