Wednesday 31 October 2012

திருஞானசம்பந்தர்


திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தர்

வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க, பூதப்பரம்பரை பொலிய,எம்பெருமான் இன்னருளால் பலகாலம் கடலில் காத்திருந்து,ஊழியிலும் கடலில் மிதந்த காழியம்பதியில் கரையேறிய ஞானச்சுடர்விளக்கே சம்பந்தப்பெருமானாவார்.

        ஏழாம் நூற்றாண்டில் சோழவளநாட்டில்,மூலத்திருநாளில் ஒரு வைகாசித்திங்களில்,சீர்மிகு சீர்காழியம்பதியில்,பேர்பெற்ற ஆதிசைவர் சிவபாத இருதயருக்கும்,அம்மையார் பகவதிக்கும், சைவம் தழைக்கவந்த தெய்வமகவாய் திருஅவதாரம் செய்தார் திருஞான சம்பந்தர்.

        நீராடச்சென்ற தந்தையாருடன் தானும் வருவேனென்றுப் போராடி பின்சென்ற பாலகர், தண்ணீரில் தந்தையார் மூழ்கியது கண்டு கலக்கமுற்று கண்ணீரும் கம்பலையுமானார்.அம்மே அப்பே என்று அழ ஆரம்பித்தார்.

தழுவக்குழைந்திருந்த தாயார் பார்வதி அழுகைக்குரல் கேட்டு ஓடிவந்து அப்பாலகருக்கு ஞானப்பாலூட்டி மறைந்தனர். தாய்ப்பால் பருகிய பாலகரின் வாய்ப்பால்  துளியைப்பார்த்தத் தாதையார் கடிந்து விவரம் கேட்க்கவே , கைநீட்டி அம்மையப்பரை அடையாளம் காட்டி, இவ்வுலகம் உய்வுற வந்த ஆதிமந்திரத் திருப்பதிகமான "தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி" என்றப் பதிகத்தை அருளினார்.

              அமணர் இருள்மேகம் மூடிக்கிடந்த அருந்தமிழ் நாட்டில் அருளமுதாம் சைவம் ஒளிபெறவே ஆலயங்கள் தொறும் சென்று அருள்ப்பதிகங்கள் பாடிப் பரவினார்.சுற்றியிருப்போர் வியக்கும் வண்ணம் வெற்றுக்கையால் தாளமிடும் சம்பந்தப்பெருமான் திருக்கோலக்காவில் இறைவன் திருக்கையால் பொற்றாளமும் பெற்றாராயினர்.

            திருநெல்வாயில் அறத்துறையில் முத்துச்சிவிகையும்,திருப்பட்டீச்வரத்தில் முத்துப் பந்தரும் பெற்றார்.தந்தையார் வேள்வி மேற்கொள்ளவேண்டி திருவாவடுதுறையில் பொற்கிழியும் பெற்றார்.செங்குன்றூரில் நலிர்சுர நோயை நீக்கியருளினார்.
      எழில் பொழில் குயில் பயில் தருமையில் யாழில் இசைக்கவொண்ணா இன்குரலிசைத்து யாழ்முரிப்பதிகத்தால் யாழ்ப்பாணருக்கு அருள் பாலித்தார்.காழிமாநகர் வாழி சம்பந்தன் வீழிமிழலையில் பஞ்சம் போக்கும் படிக்காசு பெற்றார்.

       திருநாவுக்கரசர்பால் கொண்ட நிகரில்லா அன்பின்காரணமாக அவரை அப்பரே என அழைத்தார். அப்பர் பெருமானும் இவரை அன்போடு பிள்ளாய் எனப் பேசி நெகிழ்ந்துருகினார். இருவரும் இணைந்து  திருமறைக்காடு சென்றனர். சதுர்மறைகளால் பூட்டப்பட்டத் திருக்கதவம் எதிர் சென்று பதிகங்கள் பாடினர். திருக்கதவம் திறக்க அப்பர் பாடினார்.திருஞான சம்பந்தர் திருக்காப்பு அருளினார்.   நான்மாடக்கூடலில் கூன்பாண்டியனின் அரவணைப்பு தமக்குண்டு எனக்கொண்டு தான்தோன்றியாய் நெறிபிறழ்ந்த அமணர் கூட்டத்தினை அனல் புனல் வாதங்களில் வென்று வீழ்த்தினார்.

      திரு ஆலவாயன் திருநீற்றுப்பதிகத்தால் மன்னவன் வெப்பு நோயை நீக்கி, என்றுமே கூன் தானோ என்றிருந்த  வழுதியை நின்றசீர் நெடுமாறனாக்கினார். திரு முருகனே  திருஞானசம்பந்தராய் வந்துதித்தார் என்று உறுதி செய்து திருப்புகழில் அருணகிரியார்

        "கதிர காம வெற்பில் உறைவோனே
          கனக மேரு வொத்த புய வீரா
          மதுரவாணி யுற்ற கழலோனே
          வழுதி கூன் நிமிர்த்தப் பெருமாளே."
என்று முருகனைப்பாடுகிறார்.

    விடம் தீண்டிய வாலிபனை சடையா எனுமால் எனும் பதிகத்தால் உயிர்ப்பித்த அற்புதம் திருமருகலிலும், குடம் இருந்த வெள்ளெலும்பைப்  பூம்பாவைப் பதிகம் பாடி பெண்ணுருவாய் மாற்றிய அதிசயம் திரு மயிலையிலும் ஈடேறியது.

 எதிரிலா பக்திமூலம் ஏழை அடியவர்பால் எதிர்வந்த ஊழையும் உப்பக்கம் கண்டார் சம்பந்தப்பெருமான். பாலமுதம் உண்டு தமிழ் பாமாலை பாடி இந்தத் தாலம் புகழவந்த பிரான், பதிகம் பல பாடி நீடிய பிள்ளை, பரசுதரர்க்கு அதிகம் அணுக்கன், அமணர்க்குக் காலன்,காழிநாட்டுக் கவுணியர் குலத்தை வாழத்தோன்றிய வண்டமிழ் விரகன்,காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து மாமாரி ஈன்ற மணியாகிய சம்பந்தப்பிரான் இறுதியில் திருநல்லூர் பெருமணத்தில் நடந்தேறிய திருமணத்தில் நமச்சிவாயப்பதிகம் பாடிஉடன்வந்த எல்லோருடனும் இறைவனின் திருவருள் ஒளியில் கலந்து தமது மண்ணுலக நோக்கினை நிறைவு செய்தார்.
" நீதியின் நிறைபுகழ்
மேதகு புகலிமன்
மாதமிழ் விரகனை
ஓதுவது உறுதியே "(11-ம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்


சு . நாகராஜன்,
தலைவர்,
சேக்கிழார் அறநெறி இயக்கம்
கன்னியாகுமாரி   மாவட்டம்.

No comments:

Post a Comment